ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்; அரசு பள்ளி ஹெச்.எம்., மாயம்

ஓசூர், ஆக.4: ஓசூர் அருகே சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (55). சூளகிரி அருகே பெக்கிலி அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியராக உள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். ராதாகிருஷ்ணனுக்கு ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்யும் பழக்கம் இருந்தது. இதற்காக அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் ₹30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால், அவர் எதிர்பார்த்த அளவிற்கு பணம் கிடைக்காததால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்ய துவங்கினர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராதாகிருஷ்ணன் கடந்த பிப்ரவரி 7ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. செல்போனையும் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் மனைவி கீதா அட்கோ போலீசில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி புகாரளித்தார். 6 மாதமாகியும் ராதாகிருஷ்ணன் இருக்குமிடம் தெரியாததால், அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: