ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் கே.ஆர்.பி.அணையில் புனித நீராடி மகிழ்ந்த மக்கள்

கிருஷ்ணகிரி, ஆக.4: கிருஷ்ணகிரியில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கே.ஆர்.பி.அணையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புனித நீராடி மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு தினத்தன்று அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்படுவதோடு, நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். புதுமண தம்பதிகள் நீர்நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி வழிபடுவது வழக்கம். மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் தற்போது 50.05 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு 2082 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காலை 6 மணி வரை 2390 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடுவர் என்பதால், 700 கன அடி தண்ணீரை மட்டும் பொதுப்பணித்துறையினர் நேற்று திறந்து விட்டனர்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில். நேற்று நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். மேலும், அங்குள்ள மார்கண்டேஸ்வரர் கோயில் முன்புறம் உள்ள நந்தி சிலை வாயில் இருந்து வந்த தண்ணீரிலும், தென்பெண்ணை ஆற்றில் ஓடும் தண்ணீரிலும் ஏராளமானோர் புனித நீராடி சாமியை வழிபட்டனர். அவர்கள் அணை பூங்காவின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். குழந்தைகள் பூங்காவில் உள்ள ஊஞ்சல், சருக்கு பலகை போன்றவற்றில் விளையாடி மகிழ்ந்தனர். விழாவினையொட்டி அணைப்பகுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் சிறப்பு ஏற்பாடாக அணைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தவும், அணையின் நுழைவு சீட்டு வழங்கும் பகுதியிலும் இரும்பு தடுப்புகள் கட்டப்பட்டிருந்தது. அணைப்பகுதியில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியிலும் ஆடிப்பெருக்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அத்துடன் அணையில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. விழாவினையொட்டி பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி பிடித்து கொள்ள, பூசாரி சாட்டையால் 3 முறை அவர்களது கைகளில் அடித்து பேயை விரட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவினையொட்டி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் உத்தரவின்படி, போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: