தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில் இன்று பெருவிழா மாலை ஆராதனை

தூத்துக்குடி, ஆக. 4: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில் இன்று பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அதிகாலை 4.30 மணி, மதியம் 12 மணி, மாலை 3 மணி, இரவு 7.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, அருளிக்கஆசீர், நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று 9ம் திருநாளை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2ம் திருப்பலி, 6.30 மணிக்கு புனித சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை மழலையர் துவக்கப்பள்ளி, மனையியல் கல்லூரி, புனித சார்லஸ் பள்ளி ஆகியவற்றுக்கான திருப்பலி நடந்தது. 7.30 மணிக்கு புனித யூதாததேயு ஆலய ஆலய பங்குமக்கள், கப்புசின் சபை துறைவியர், திரு இருதய சபை அருட்சகோதரிகள், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. 8.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கு மக்கள், 9.30 மணிக்கு  புதுக்கோட்டை, அந்தோணியார்புரம் பங்கு மக்கள், பகல் 11 மணிக்கு ரீத்தம்மாள்புரம் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு பெண்கள் பணிக்குழுக்ளுக்கான திருப்பலி நடந்தது. இரவு 7 மணிக்கு பங்குத்தந்தை ஜெரோசின் கலந்து கொண்டு நிறை மீட்பின் ஊற்று அன்னை மரியா என்ற தலைப்பில் மறையுரை ஆற்றினார்.

திருப்பலிகளில் ஆலய பங்குத்தந்தை குமார்ராஜா முன்னிலை வகித்தார்.

இன்று(4ம் தேதி) இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அன்னையின் சப்பர பவனி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை(5ம் தேதி) காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி, 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளை. மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போக்குவரத்து  மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலயம் மின்னொளியில் ஜொலிக்கிறது. இறைமக்கள் வீடுகள், கடைகள், படகுகளை மின்விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். மேலும் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: