சிறு, குறு வணிகர்களுக்கு சலுகை அடிப்படையில் மின் கட்டணம்; அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விக்கிரமராஜா கோரிக்கை மனு

சென்னை:  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நேற்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை மனு அளித்தார். அப்போது, பேரமைப்பு மாநில தலைமைச் செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி மற்றும் நிர்வாகிகள்  உடனிருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயம் செய்திட வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளபடி, புதிய கட்டண அறிவிப்புக்கான ஆட்சேபணையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சிறு-குறு வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும், தற்போது நிலவும் கொரோனா காலத்திற்கு பின்னுள்ள பொருளாதார சூழ்நிலையை கவனத்தில் கொண்டும், அரசு மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து பதிவு செய்ய விரும்புகின்றது.

மானியத்துடன் கூடிய குறைந்தபட்ச மின் பயன்பாடு 2 மாதங்களுக்கு 100யூனிட் என்பதை, மாதம் ஒன்றிற்கு 200 யூனிட் என மாற்றி அமைக்கப்பட வேண்டும். தற்போது மின் கட்டண உயர்வினை சிறு, குறு வணிகர்களுக்கு உரிய சலுகைகளுடனும், மானியத்துடனும் வீதப்பட்டி V-ல் இருந்து மாற்றி சிறு,குறு வணிகர்களை தனி தொகுப்பாக மாற்றி அமைத்திட உரிய நடவடிக்கை எடுத்திடவும், மின் கட்டணங்களை பெரியநிறுவனங்களுக்கு இணையாக சிறு,குறு வணிகர்கள் கட்டுவதை தவிர்த்திடவும், மத்திய அரசின் எம்எஸ்எம்இ சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிறு,குறு வணிகர்களுக்கு சலுகை அடிப்படையில் மின் கட்டணங்களை அளித்திடவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மிகுந்த அழுத்தத்துடன் தனது கருத்தையும், ஆட்சேபணையையும் தெரிவித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: