×

திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற அைழப்பு

திருவாரூர், ஆக 3: திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவிதொகை பெற வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். அதன்படி கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதியன்றோ அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600ம் என இந்த உதவி தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராயின் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த மாதம் (ஜூன்) 30ம் தேதியுடன் ஒராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை கோரும் விண்ணப்பதாரர்கள் உதவிதொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது.

முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.  எனவே திருவாரூர் மாவட்டத்தில் தகுதியுடை விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பத்தை tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் இணைத்து வரும் 30ம் தேதிக்குள் திருவாரூர் விளமலில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த உதவிதொகை மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களுக்கும், மற்றவர்களுக்கு 3 வருடங்களுக்கும் வழங்கப்பட்டுவரும்.  உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தவறியவர்கள் உடன் பூர்த்தி செய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvarur district ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி