×

நகர்ப்புற தூய்மை பணித் திட்டத்தில் நரிக்குறவ பெண்களுக்கு மீண்டும் வேலை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் உத்தரவு

தஞ்சாவூர், ஆக. 3: தஞ்சாவூரில் வேலையை விட்டு நீக்கியதாக கூறப்பட்ட நரிக்குறவ பெண்களுக்கு உடனடியாக தொடர்ந்து பணி வழங்க மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் உத்தரவிட்டார். தஞ்சை மகர்நோன்புச்சாவடி பகுதி 31வது வார்டில் உள்ள சின்ன ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு 31வது வார்டில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டவரை சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட நரிக்குறவர் பெண்கள் வழிமறித்து சூழ்ந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள், கடந்த ஒரு மாதமாக நகர்ப்புற தூய்மை பணித் திட்டத்தில் இந்த வார்டில் வேலை பார்த்தோம். 100 நாளைக்கு வேலை பார்க்கலாம் என கூறினார்கள். ஆனால் ஒரு மாதம்தான் வேலை வழங்கியுள்ளனர். சம்பளமும் இன்னும் வழங்கவில்லை.

இந்நிலையில் வேலை இனி கிடையாது என கூறிவிட்டனர். இதனால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம். எங்களுக்கு மீண்டும் இந்த வேலையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைக் கேட்ட மேயர் சண்.ராமநாதன், உங்கள் சூழ்நிலை புரிகிறது. உங்களை யாரும் வேலை விட்டு நீக்கவில்லை. உங்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்படும். சம்பளமும் உடனடியாக வழங்கப்படும். கவலைப்படாமல் சொல்லுங்கள் என்று உறுதி அளித்தார். இதையடுத்து நரிக்குறவ பெண்கள் மேயருக்கு நன்றி கூறி வழி அனுப்பி வைத்தனர். மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் 31வது வார்டு உறுப்பினர் ஜெய்சதீஷ், உதவி பொறியாளர் சந்திரபோஸ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர். சின்ன ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி சாலை ஓரங்களில் கொய்யா, பழா, மா உள்ளிட்ட ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags : Municipal Corporation ,Ramanathan ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்