×

திருமயம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திருமயம். ஆக. 3: திருமயம் அரசு கல்லூரி கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கல்லூரி நடப்பாண்டு முதல் அமைச்சர் ரகுபதியின் முயற்சியால் தமிழக அரசு திருமயத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கி உள்ளது. இதன் அடிப்படையில் நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. இதற்காக விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் தற்போது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள், என்சிசி முதலான சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு நடைபெறும். இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் நடைபெறும் கலந்தாய்வில் பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல் பிரிவிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து 8ம் தேதி காலை நடைபெறும் கலந்தாய்வில் பிஏ தமிழ், ஆங்கிலம், பிகாம் வணிகவியல் துறை மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ் இணைய வழி பதிவு செய்த விண்ணப்பம், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல் கொண்டு வருவதுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முன்னுரிமைச் சான்று, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு நகல் ஆகியவை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு பிஏ தமிழ், ஆங்கிலம், பிகாம் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.3025, பிஎஸ்சி கணிதம் பாடத்திற்கு ரூ.3045, பிஎஸ்சி கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கு ரூ.2445 வசூலிக்கப்படும். கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை பட்டியல் குறித்த தகவல்கள் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

Tags : Thirumayam Government College ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ