×

8வது மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல் திருப்பனந்தாளில் நிரந்தர பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும்

திருவிடைமருதூர், ஆக. 3: திருப்பனந்தாளில் நிரந்தர பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கலைமணி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஜீவபாரதி, விவசாய சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், கொளஞ்சிநாதன், சாமிக்கண்ணு, ஐயப்பன், கணேசன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். திருப்பனந்தாள் பகுதியில் விவசாயம் செய்த பருத்திகளைக் கொள்முதல் செய்வதற்கு பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடம் தற்காலிகமாக அமைந்ததாலும், மழை நேரங்களில் பருத்தி கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். எனவே திருப்பனந்தாளில் பருத்தி ஒழுங்குமுறை விற்பனை நிலையத்திற்கு மழை காலங்களில் தண்ணீர் தேங்காத மேடான பகுதிகளில் நிரந்தர கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். கொள்முதல் நிலையங்களில் பருத்தி உலர் இயந்திர வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

நீண்ட நாளாக பூட்டி கிடக்கும் பட்டவர்த்தி சர்க்கரை ஆலையை உடனே திறக்க வேண்டும். உக்கரையில் உள்ள அம்மையப்பன் வடிகால் வாய்க்காலை விவசாயம் செய்வதற்கு ஏதுவாக போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகளை சேதமாகாமல், மழை நீர் புகாமல் இருப்பதற்கு நிரந்தர செட் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 24ம் தேதி அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

Tags : 8th ,District Conference ,Tiruppanandal ,
× RELATED இயற்கையின் கொடை பிச்சா ‘வரம்’: 8வது...