ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் தொழில் துவங்க 50% மானியத்துடன் கடன்

நாகப்பட்டினம், ஆக.3: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மக்கள் தொழில் துவங்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் தெரிவித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டு கடன் பெற விண்ணப்பித்த பயனாளிகளுக்கான நேர்காணல் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் தலைமையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமன் முன்னிலையில் நடந்த நேர்காணலில் வங்கி சார்ந்த அதிகாரிகள், கால்நடை துறை, தாட்கோ அலுவலர்கள் கொண்ட குழுவினர் கடன் பெற விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் செய்தனர்.

நேர்காணல் முடிந்த பின்னர் தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் தாட்கோ மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தொழில் தொடங்க முனைவோர்களுக்கும் தாட்கோ மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பம் செய்தவர்களிடம் இருந்து தகுதியானவர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெறுகிறது. ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். பயனாளிகளை வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கொண்ட குழு தேர்வு செய்யும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடப்பு ஆண்டில் தாட்கோ மூலம் கடன் பெறுபவர்களுக்கு ரூ.26 கோடியே 36 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.26 கோடியே 61 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மளிகை கடை உள்ளிட்ட சொந்த தொழில் தொடங்க கடன் பெற உள்ளவர்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் டிராக்டர் மற்றும் லோடு வேன் உள்ளிட்டவைகள் வாங்க ஆயிரத்து 243 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 60 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் டிராக்டர் வாங்க சொந்த நிலம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இதுவரை இருந்து வருகிறது. சொந்த நிலம் இல்லாத விவசாயிகள் டிராக்டர் வாங்க முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே இதை மாற்றி சொந்த நிலம் இல்லாத விவசாயிகளும் தாட்கோவில் கடன் பெற்று டிராக்டர் வாங்க விதிமுறை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் தாட்கோவில் டிராக்டர் வாங்கி அதன் மூலம் வருமானத்தை பெருக்கி கொள்ள முடியும். தமிழகம் முழுவதும் தாட்கோவில் இடைத்தரகர்கள் இல்லாமல் கடன்கள் பெற ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: