×

பேராலய ஆண்டு பெருவிழா வேளாங்கண்ணி கடற்கரையில் குளிக்க தடை: கலெக்டர் அதிரடி உத்தரவு

நாகப்பட்டினம், ஆக.3: வேளாங்கண்ணி பேராலய விழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி பேராலய விழாக் காலங்களில் கடலில் குளிக்க தடை விதித்து கலெக்டர் அருண்தம்புராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா புதிய திருமண மண்டபத்தில் நடந்தது. வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி வரவேற்றார். கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. பெருவிழாவின் தேரோட்டம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி இரவு நடைபெறுகிறது.

விழா காலங்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பஸ்களில் பயணம் செய்ய பல்வேறு மண்டலங்களிலிருந்து சிறப்பு பஸ்களை இரவு, பகலாக இயக்க வேண்டும். பயணிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக பஸ்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்க வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் போக்குவரத்து கழக பஸ்களை வழிநடத்தி பொது மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொது மக்களுக்கு திருடர்களின் தொல்லை ஏற்படாத வகையில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் பொருத்தி கண்காணிப்பு பணிகளை செய்ய வேண்டும். கொடியேற்றும் நாள் மற்றும் தேர் செல்லும் நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிகளை தீவிரபடுத்த வேண்டும்.

24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் காவல் துறையினர் ஈடுபடும் வகையில் தகுந்த நேரத்தில் காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும். போக்குவரத்து துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் வீரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாவிற்கு வருகை தரும் யாத்திரிகர்களின் குழந்தைகள் தொலைந்து விடா வண்ணம் நீரில் அழியாத அடையாள அட்டையை கையில் அணிவித்து பெற்றோரின் அலைபேசி எண்ணையும் பதிவிட வேண்டும். வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்கினால் விடுதி உரிமையாளர்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் வெளிநாட்டினரின் அடையாள ஆவணங்களை முறையாக சரிபார்த்து அனுமதி அளிக்க வேண்டும். பொது மக்கள் கடற்கரையின் அருகில் செல்வதற்கு எல்லை நிர்ணயம் செய்து தடை விதித்திட வேண்டும். விழா நாட்களில் வேளாங்கண்ணி கடலில் பொதுமக்கள், பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழா காலங்களில் வேளாங்கண்ணி நகரத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி வாகனங்களை தடையின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டம் நடத்தி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். விழாவிற்கு வருகை தரும் வாகனங்களை தணிக்கை செய்ய மோட்டார் வாகன ஆய்வாளர்களை அதிக அளவில் நியமனம் செய்ய வேண்டும். தனியார் விடுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தரமான உணவு ஆகியவை வழங்க வேண்டும். நிர்ணயம் செய்ததைவிட அதிக அளவில் கட்டணம் வசூல் செய்ய கூடாது. யாத்திரிகர்கள் வருகைக்கு ஏற்ப 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் அமர்த்திட வேண்டும். 10 இடங்களுக்கு மேல் மருத்துவ முகாம்கள் அமைத்து, கொரோனா தடுப்பூசி முகாம்களையும் நடத்த வேண்டும்.

விழா காலங்களில் பொதுமக்கள் மற்றும் திருப்பயணிக்கு தட்டுப்பாடு இல்லாமல் தேவையான அளவு குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை பேரூராட்சி சார்பில் விநியோகம் செய்ய வேண்டும். அனைத்து உணவு விடுதிகளை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து உணவின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும். இறைச்சி, மீன் வருவல் விற்பனை செய்யும் இடங்கள் சுகாதாரமாக உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். பழைய உணவுகளை சூடு செய்து விநியோகம் செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். தேவையான தீயணைப்பு வாகனங்கள், உயிர் காக்கும் ரப்பர் படகுகள் மற்றும் தீயணைப்பு வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த முன்னேற்பாடு பணிகள் அனைத்தையும் வரும் 14ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். எஸ்பி ஜவஹர், டிஆர்ஓ ஷகிலா, நாகப்பட்டினம் ஆர்டிஓ முருகேசன், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ், பேராலய பங்கு தந்தை அற்புதராஜ், பேரூராட்சி தலைவர் டயானா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Velankanni beach ,
× RELATED வேளாங்கண்ணி கடற்கரையில் கடலின் ஆழத்தை காட்டும் கருவி கரை ஒதுங்கியது