×

ஓபிஎஸ்-டிடிவி சந்திப்பா? ஓ.ரவீந்திரநாத் எம்பி பரபரப்பு பேட்டி

ராஜபாளையம், ஆக. 2: தேனி தொகுதி அதிமுக எம்பி ஓ.ரவீந்திரநாத் எம்பி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் திரும்பி வரும் வழியில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள தங்களது ஆதரவாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. அதிமுகவில் விசுவாசமிக்க ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். எளிய தொண்டன்தான் அதிமுகவுக்கு தலைமை பொறுப்புக்கு வரமுடியும். தலைமைக்கழகம் யாருக்கு சொந்தம் என்று தற்போது தெளிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக்கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது.

இது குறித்து மேல்முறையீடு செய்தபோது, இரண்டு வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதிமுகவில் உள்ள உண்மையான எளிய தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணம் தீர்ப்பு அமையும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. என்னுடைய பங்களிப்பு குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார். டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை சந்திக்கவில்லை. இனிமேல் சந்திப்பு நடைபெறுமா என்பது தொண்டர்கள் மனதில் நினைப்பது போல் இருக்கும். தமிழகத்தில் ஒரே அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் நான்தான். டெல்லியை பொறுத்தவரை 540 எம்பிக்களில் அதிமுக ஜீரோ என்ற இடத்தில் இல்லாமல் ஒரு எம்பி இருக்கிறார் என்ற கௌரவமான நிலை உள்ளது. எனவே, கட்சியில் நடந்து வரும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பியாகத்தான் டெல்லியில் பணியாற்றி வருகிறேன். அதிமுக பொதுக்குழு குறித்தோ அல்லது அதன் செயல்பாடுகள் குறித்தோ கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : OPS ,DTV ,O. Rabindranath ,
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்