பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வரும் தேக்கடி தலைமதகில் குப்பை அகற்றம் தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை

கூடலூர், ஆக. 2: பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் வரும் தேக்கடி தலைமதகு பகுதியில், தேங்கி கிடந்த குப்பை கழிவுகள், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முன்னிலையில், தொழிலாளர்கள் அகற்றின.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர், தேக்கடியிலுள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள தலைமதகு பகுதி சுரங்க வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுகிறது. தேக்கடி மற்றும் குமுளி, ஆனவிலாசம் பகுதியில் அளவுக்கதிகமாக வளர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பை கழிவுகள் மழை வெள்ளத்துடன் சேர்ந்து வந்து இந்த வாய்க்காலில் கலந்து ஷட்டர் பகுதியை அடைத்தது. இதனால், கடந்த 2011ல் ரூ.30 லட்சம் செலவில் தலைமதகுக்கு முன், வாய்க்காலின் குறுக்காக இடைவெளி விட்ட இரும்பு தடுப்பு கதவுகள் அமைத்தனர். இதனால், வாய்காலில் ஒழுகி வரும் ஆகாயத்தாமரைகள் தடுக்கப்பட்டு, தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் வெளியேறியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக குமுளி பகுதியில், மழை பெய்து வருவதால், அப்பகுதியிலிருந்து வெளியேறிய குப்பை கழிவுகள் இருப்பு தடுப்பு கதவு பகுதியை அடைத்துக் கொண்டது.

இதனால், அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் 1,800 கனஅடி தண்ணீர் முழுமையாக வரவில்லை. இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், நேற்று பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவிப்பொறியாளர் ராஜகோபால் மேற்பார்வையில், பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமதகுப் பகுதியில் அடைத்திருந்த குப்பை கூளங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மதகுப்பகுதியில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி காலை 10.30 முதல் மாலை 03.30 வரை மதகு அடைக்கப்பட்டு தமிழப்பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டது.

 மாலையில் மதகுகள் திறக்கப்பட்டு தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1867 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Related Stories: