வாடிப்பட்டி அருகே லாரி மீது கார் மோதல் இரண்டு பேர் பலி

வாடிப்பட்டி,ஆக.2: வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது, கார் மோதிய விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் பலியாகினர்.

திருநெல்வேலி பழையபேட்டையைச் சேர்ந்தவர் பொன்னுதுரை. கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள்(71). இவர்களின் மகள் பொன்மலருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் முன்னே செல்ல செல்லம்மாள் மற்றொரு காரில் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். காரை அதே பகுதியை சேர்ந்த ராஜா(38) ஓட்டி வந்தார். இவர்களது கார் வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் குலசேகரன்கோட்டை பிரிவு என்ற இடத்தில் சென்ற போது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடம் சென்ற வாடிப்பட்டி தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் செல்லம்மாளை உயிருக்கு ஆபத்தான நிலையிலும், டிரைவர் ராஜாவை சடலமாகவும் மீட்டனர். இதில் செல்லம்மாள் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: