×

நகைக் கடையை சூறையாடிய வழக்கு கடலூர் சிறையில் ரவுடியிடம் விசாரணை

புதுச்சேரி,   ஆக. 2: புதுச்சேரி வைசியாள் வீதியை சேர்ந்தவர் முருகன் (52). கொசக்கடை   வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்குள் கடந்த 18ம்தேதி புகுந்த ரவுடி கும்பல் ரூ.10 லட்சம் மதிப்பிலான கண்ணாடிகளை அடித்து நொறுக்கி   சூறையாடியதோடு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவானது. இதுதொடர்பாக கடை   உரிமையாளரான முருகன் பெரியகடை போலீசில் முறையிட்டார். சம்பவ இடத்துக்கு   சென்று விசாரணை நடத்திய போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில்  பதிவான  காட்சிகளை பார்வையிட்டனர்.

விசாரணையில், பணப்பிரச்னை விவகாரத்தில்  முருகனுக்கு மிரட்டல் விடுக்கும்  வகையில் கூலிப்படையை ஏவி சிலர் கடையை  சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து  குற்றவாளிகளை அடையாளம் கண்ட  தனிப்படையினர் புதுச்சேரி, கடலூரைச் சேர்ந்த  சிலரை வலைவீசி தேடிவந்தனர்.  இச்சம்பவத்தில் தொடர்புடைய ரவுடியான  கடலூரைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்ற  ஏழுமலை (28) என்பவரை  திருப்பாப்புலியூர் தங்களது வழக்கில் கைது செய்து  அங்குள்ள சிறையில்  அடைத்திருந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில்,  புதுச்சேரி நகைக் கடையை  சூறையாடியதை அவர் ஒப்புக் கொண்டதால், பெரியகடை  போலீசுக்கு  தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன்  உத்தரவின்பேரில் நேற்று  கடலூர் சிறைக்கு சென்று எஸ்ஐ சிவசங்கர் தலைமையிலான  போலீசார், இச்சம்பவம்  தொடர்பாக தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்தினர். அவர் குற்றத்தை ஒப்புக்  கொண்டால், உடனடியாக புதுச்சேரி நீதிமன்ற அனுமதி  பெற்று அவரை கைது  செய்ய முடிவெடுத்துள்ள போலீசார், பின்னர் அவரை காவலில்  எடுத்து புதுச்சேரி  அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகே இவ்வழக்கில்   மேலும் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என்று போலீசார்   தெரிவிக்கின்றனர்.

Tags : Cuddalore jail ,
× RELATED கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக...