×

பொறியாளர்கள் தேர்வில் என்எல்சி நிர்வாகம் தமிழர்களுக்கு துரோகம்

நெய்வேலி, ஆக. 2: நெய்வேலி சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: நெய்வேலி என்எல்சி நிலக்கரி நிறுவனம் வெளியிட்டுள்ள 299 பொறியாளர்களின் தேர்வில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. ஒரு நிறுவனத்திற்கு வேலை வாய்ப்பிற்கு எந்த பிரிவாக இருந்தாலும் விளம்பரப்படுத்திய பிறகு அதற்கான தேர்வை நடத்தி அந்த தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெறும் மதிப்பெண்களை வைத்தே வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது வழக்கம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் குறைகளை சுட்டிக்காட்டி கடந்த ஏப்ரல் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பொறியாளர் தேர்விற்கு விளம்பரப் படுத்துவதற்கு முன்பு நடத்திய கேட் மதிப்பெண்களை வைத்து பொறியாளர்களை தேர்வு செய்வது தவறு என்பதை சுட்டிக்காட்டி இருந்தார்கள். எனவே பொறியாளர்களுக்கு பிரத்தியேகமாக ஒரு தேர்வை நடத்தி பொறியாளர்களை தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார்.

 அதன் அடிப்படையில் 299 பேர் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக பொறியாளர் தேர்விற்கு விளம்பரப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில் தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அறிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செயலாக உள்ளது. இந்நிலையில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மூலம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர்.பாலு மூலம் இந்திய ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி இந்த பொறியாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென கேட்டிருக்கிறோம். மேலும்நெய்வேலி நிறுவனத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு கொண்டு வந்திருக்கிறார்.

 மேலும் என்எல்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே நிலம் கொடுத்தவர்களுக்கோ, அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கோ வேலை வாய்ப்பை முழுவதுமாகவோ, நிரந்தர வேலையாகவோ கொடுக்கப்படாத நிலையில் தற்போது பொறியாளர் தேர்வில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களோ, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லாத இந்த பட்டியலை வெளியிடுவது. அவர்களை நிர்வாகம் வேலையில் சேர்ப்பது என்பது முற்றிலும் நியாயம் இல்லை. இது மண்ணின் மைந்தர்களுக்கு நிர்வாகம் இழைக்கின்ற மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே நிர்வாகத்தின் இந்த செயல் கண்டனத்துக்கு உரியதாகும். இவ்வாறு அதில் உள்ளது.

Tags : NLC ,Tamils ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!