×

100 நாள் வேலை திட்டத்திற்கு கூலி உயர்த்த கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக. 2: ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கான கூலியை ரூ.600ஆக உயர்த்த கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த மத்திய கூலி சட்டம் நிறைவேற்றிட வேண்டும். ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தினக்கூலியாக ரூ.600 வழங்கிட வேண்டும் என்பதுடன் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

இந்த திட்டத்தினை அனைத்து பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கும் விரைவுப்படுத்திட வேண்டும். இந்த திட்டத்திற்கு என ஆண்டொன்றுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். இந்த திட்டத்தின் போதுபணிக்கு சென்று திரும்பும் போது விபத்திலோ அல்லது இயற்கையாகவோ ஏற்படும் உயிரிழப்புக்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். நிலமற்ற அனைவருக்கும் தரிசு நிலத்தை பிரித்து வழங்கிட வேண்டும். பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை அகற்றி ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து உணவு பொருட்களும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமாரராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநில குழு உறுப்பினரும் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏவான மாரிமுத்து மற்றும் பொறுப்பாளர்கள் அமிர்தலிங்கம், கலைமணி, மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : labor ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...