×

திருவாரூர் மாவட்டத்தில் 9,534 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்; விரைவில் வழங்க நடவடிக்கை

திருவாரூர், ஆக. 2: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 9 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்புகள் வரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், ஸ்கூல் பேக், காலணிகள் மற்றும் ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

இது மட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையும் அளிக்கப்பட்டு வருவதுடன் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளும் இயங்கி வருகின்றன. இது மட்டுமின்றி மதிய உணவு திட்டத்தை போன்று தற்போது மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு தவறாமல் வரவழைக்கும் வகையில் காலை சிற்றுண்டி உணவையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிளையும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டமும் அரசு மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  

இதனையொட்டி நடப்பாண்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கடந்த வாரம் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தற்போது இந்த இலவச சைக்கிள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 11ம் வகுப்பு படித்து வரும் 9 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனையொட்டி மாவட்டத்தில் பூந்தோட்டம், பேரளம், குளிக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சைக்கிள் உதிரி பாகங்களை கொண்டு கோர்க்கப்பட்டு வருவதுடன் பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் இந்த சைக்கிள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tiruvarur district ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி