கும்பகோணம் மகாமக குளத்தில் 5 அஸ்திர தேவர்களுக்கு ஆடிப்பூர தீர்த்தவாரி பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஆக.2: ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமக திருக்குளக்கரையில் ,ஆறு கோயில்களில் இருந்து உற்சவர் ஆடிப்பூர அம்மன் எழுந்தருளினர். மேலும் 5 கோயில்களில் இருந்து எழுந்தருளிய 5 அஸ்திரதேவர்களுக்கு ஆடிப்பூரத் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக திருக்குளத்தின் மேற்கு கரைக்கு, காசிவிஸ்வநாதர், ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், நாகேஸ்வரர் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகிய ஆறு கோயில்களில் இருந்து, உற்சவர் ஆடிப்பூர அம்மன்கள் நாதஸ்வர மேள தாளம் முழங்க எழுந்தருள, குளத்தின் படித்துறையில் எழுந்தருளினர்.

காசிவிஸ்வநாதர், ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் மற்றும் நாகேஸ்வரர் ஆகிய 5 கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அஸ்திர தேவர்களை எழுந்தருள செய்து, ஒரே சமயத்தில், அவைகளுக்கு திரவியப்பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்கள் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் 5 அஸ்திர தேவர்களையும், 5 சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்தபடி, திருக்குளத்தில் இறங்கி, மும்முறை மூழ்கி எழ, ஆடிப்பூரத்தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மகாமககுளத்தில் அதிகமான அளவு தண்ணீர் இருந்ததால், குளத்தில் இறங்கி குளிக்க யாரையும் காவல்துறையினர் அனுமதிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: