ஆக்கிரமிப்பில் இருந்த நாகூர் தர்காவுக்கு சொந்தமான 7.50 லட்சம் சதுர அடி நிலம் மீட்பு

நாகப்பட்டினம், ஆக.2: ஆக்கிரமிப்பில் இருந்த நாகூர் தர்காவுக்கு சொந்தமான 7.50 லட்சம் சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளது.

நாகூர் தர்காவிற்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் சில தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகூர் தர்காவிற்கு புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலர் குழு நாகூர் தர்கா சொத்துக்களை மீட்க நாகூர் தர்கா சொத்துக்கள் மீட்பு குழு என்ற பிரிவினை உருவாக்கியுள்ளது. இதில் நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கி உள்ளனர். இந்த குழு தர்கா சொத்துக்களை கண்டறிந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாகூர் தர்கா பெயரில் உள்ள சொத்தினை அந்தந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் இந்த குழுவினர் தொடர்பு கொண்டு பேசி சொத்துக்களை அடையாளம் கண்டு, ஆக்கிரமிப்பாக பயன்படுத்துபவர்களிடம் பேசி வருகின்றனர். இதன்படி நேற்று சீர்காழி வட்டம், திருமைலாடி கிராமம், துளசேந்திரபுர வட்டத்தில் இருந்த (28 ஆயிரத்து 524 சதுர அடி நிலம் மீட்கப்பட்டு நாகூர் தர்கா நிர்வாக வசம் ஒப்படைக்கப்பட்டது. கொள்ளிடம், தைக்காலை சேர்ந்த இத்ரீஸ் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் வசம் இருந்த நிலத்தை அவர்கள் தர்கா கோப்புகளின் அடிப்படையில் நாகூர் தர்கா நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். இது வரை இந்த சொத்து மீட்பு குழுவினர் 7.50 லட்சம் சதுர அடி நாகூர் தர்கா நிலம் மீட்கப்பட்டுள்ளது.

Related Stories: