புகழூர் நகராட்சியை பசுமை மயமாக்க மரக்கன்று நடும் நிகழ்ச்சி: நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

வேலாயுதம்பாளையம், ஆக.2: புகளூர் நகராட்சியை பசுமை மயமாக்கும் அதிரடி திட்டம் தொடங்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் மரக்கன்றுகளை நட்டு மரக்கன்றுகளை பராமரித்து பசுமையான நகராட்சியாக உருவாக்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வேலாயுதம்பாளையம் -புகளூர் கரூர் செல்லும் தார் சாலையின் இருபுறமும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

அதேபோல் அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் நெடுங்கிலும் பூஞ்சோலைபோல் பூச்செடிகளை நட்டு வளர்த்து வருகின்றனர். இதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் புகளூரிலுள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் அதன் அதிகாரிகள் புகழூர் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் 1,000 க்கும் மேற்பட்ட மகிழம்பூ, மா, வாகைமரம், நெட்டிலிங்கம் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் (எ) குணசேகரனிடம் வழங்கினர். அப்போது நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர்கள், துப்புரவு அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: