பஞ்சாயத்து தலைவரை தாக்கி பணம் பறிக்க முயற்சி

நாசரேத், ஜூலை 30: சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்தவர் மணிமுத்து மகன் சிவபெருமாள் (38). இவர் மீரான்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். மேலும் வாரச்சந்தைகளுக்கு சென்று காய்கனி வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஏரலில் காய்கனி வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு லோடு ஆட்டோவில் வந்துள்ளார். நாசரேத் அருகே உள்ள மேல வெள்ளமடம் அருகில் 5 பேர், அவரது வாகனத்தை மறித்துள்ளனர். அவர் வாகனத்தை நிறுத்தியதும் 5பேரும் சிவபெருமாளிடம் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த 5பேரும் லோடு ஆட்டோவை சேதப்படுத்தி, அதில் காய்கனிகள், தராசு படிக்கற்களை தூக்கி எறிந்துள்ளனர். மேலும் அவதூறாக பேசி சிவபெருமாளை தாக்கியுள்ளனர். பின்னர் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த சிவபெருமாள், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ சேது உசேன் வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் பட்டாணி விசாரணை நடத்தியதில் சிவபெருமாளை தாக்கியவர்கள் மேல வெள்ளமடத்தை சேர்ந்த சங்கரன் மகன் துரை (எ) சின்னத்துரை, வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த பழனி மகன்கள் சுந்தர், வெள்ளப்பாண்டி, சண்முகம் மகன் அம்மமுத்து, மேலவெள்ளமடத்தை சேர்ந்த பாபு மகன் முத்துக்குமார் என தெரியவந்தது. இவர் சிவபெருமாளிடம் வழிப்பறி செய்யும் நோக்கில் செய்தார்களா? அல்லது முன்விரோதத்தில் தாக்கினார்களா? என விசாரணை நடத்தி 5பேரையும் தேடி வருகிறார்.

Related Stories: