×

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம்: பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க 5லட்சம் மஞ்சப்பைகள் விநியோகிக்க இலக்கு

தூத்துக்குடி, ஜூலை30:  தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தடுக்க, பொதுமக்களுக்கு 5 லட்சம் மஞ்சப்பைகள் வழங்கப்படுகிறது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. ஆணையர் சாரு, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு தீர்மானத்தை அறிவித்தார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதும், முத்துநகர் பூங்காவில் உள்ள கடைகளுக்கான டென்டர் விடும் தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

மீதமுள்ள 28 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், ‘தூத்துக்குடி முத்துநகர் பூங்கா, படகு குழாம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்தும் அகற்றப்படும். அதே நேரத்தில் மாநகராட்சி வருமானம் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரங்களில் உள்ள மணலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒன்றிய அரசு, மாநில அரசு பங்கு உள்ளது. இதற்காக ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குழு உள்ளது. இந்த குழுவினர் 2019-ம் ஆண்டு ஆஷ் நினைவு மண்டபத்தை சீரமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து அங்கீகரித்து உள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணி நடக்கிறது. அதன்படி நடந்த பராமரிப்பு பணியைத்தான் ஆய்வு செய்தோம்.

அதனை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனை அவர்களுக்கு விளக்கமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
இதையும் மீறி மாநகராட்சிக்கு அவதூறு பரப்பும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பக்கிள் ஓடையில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் கிடந்தன. அதனை முழுமையாக அகற்றி உள்ளோம். 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு முழுவதும் தூர்வாரப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் 5 லட்சம் மஞ்சப்பைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி தொடங்கப்பட்டு 15-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.  இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள்,  மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலா 3 மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.

Tags : Thoothukudi ,Municipal Corporation ,meeting ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...