×

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு: ஆடறுப்பு மனைக்கான தீர்மானம் ஒத்திவைப்பு

நெல்லை, ஜூலை 30:  நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு காரணமாக பேட்டை ஆடறுப்பு மனைக்கு டெண்டரை அங்கீகரிக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 32 பள்ளிகளிலும் சீரமைAப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர். நெல்லை மாநகராட்சி கூட்டம், மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர பொறியாளர் அசோகன், உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.

பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ்: அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், பாளை மண்டல பகுதிகளுக்கு எப்போது வந்து சேரும்? பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் பாதியில் நிற்கின்றன. 6வது தீர்மானத்தில் குடிநீர் நீரேற்று நிலையங்களில் உள்ள பணிகளை தனியாருக்கு கொடுக்கப் போவதாக உள்ளது. அதை ஒரே நபருக்கு கொடுக்கக் கூடாது. அப்படி கொடுக்கும்போது போதிய ஆட்கள் இல்லை எனக் கூறி, அவர்கள் பணிகளை தட்டிக் கழிப்பர். நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி: நெல்லை டவுன் மண்டலத்தில் ஆடறுப்பு மனைக்கான டெண்டர் பற்றி எங்கள் மண்டலத்திலுள்ள எந்த கவுன்சிலருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. அந்த டெண்டரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பங்கேற்றுள்ளனர். அதை ரத்து செய்ய வேண்டும்.

(இதையடுத்து மண்டல தலைவர் தலைமையில் டவுன் மண்டல கவுன்சிலர்களும், ரம்ஜான் அலி தலைமையில் மேலப்பாளையம் மண்டல கவுன்சிலர்களும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேயர், துணை மேயர், கமிஷனரை சூழ்ந்து நின்றனர். இதையடுத்து அந்தத் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது) தச்சை சுப்பிரமணியன் (திமுக): டெண்டர் விஷயத்தில் இப்படி ஒரு தலையீடு எந்த காலக்கட்டத்திலும் மாநகராட்சியில் நடந்ததில்லை. அரசின் விதிமுறைகள்படியே டெண்டர்கள் நடத்தப்படுகின்றன. கவுன்சிலர் ஷர்மிளா (திமுக): பாளை  காந்தி மார்க்கெட்டில் கடைகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதில் 178 தற்காலிக கடைகள் கட்ட ரூ.99.50 லட்சமும், மீதமுள்ள 316 தற்காலிக கடைகள் கட்ட  அடுத்து ரூ.99.50 லட்சமும் நிதி ஒதுக்க மாமன்றத்தில் தீர்மானம்  வைக்கப்பட்டுள்ளது.

தற்காலிக கடைகள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீட்டில் இந்த  வேறுபாடு எதற்காக? எதற்குமே நிதி இல்லை என்று தெரிவிக்கும்போது, இதற்கு  மட்டும் எப்படி ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? பாளை சிவன் கோயில் தெப்பக்குளத்தை சுற்றிலும் மின்விளக்கு அமைக்கப்பட வேண்டும். 5வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன்: (திமுக): திம்மராஜபுரம் முப்பிடாதியம்மன் கோயில் தெருவில் உடைந்து கிடக்கும் கல்பாலத்தை சரி செய்ய வேண்டும். ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் வடிகால் ஓடை அமைத்துத் தர வேண்டும். கக்கன் நகர், திம்மராஜபுரம் குடியிருப்பு பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகள் அமைத்துத் தர வேண்டும்.

கக்கன் நகர், போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் மூடியிருக்கும் அங்கன்வாடிகளை திறந்து பயன்பாட்டுக்கு ெகாண்டு வர வேண்டும். 55வது வார்டு கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன்: மக்களது அடிப்படை தேவைகளான குடிநீர் பிரச்னைகளுக்கும், சாலைகள் அமைப்பதற்கும் போதிய ஏற்பாடுகள் இல்லை. குப்பைகள் அள்ள போதிய லாரிகளும், ஜேசிபிக்களும் இல்லாதபோது, மாநகராட்சி பணம் முறையாக செலவிடப்பட வேண்டும். எஸ்.என்.ஹைரோடு எவ்வளவு காலம்தான் இப்படியே இருக்கும்? கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ்: உடையார்பட்டி செல்வ பாலாஜி கார்டன் பகுதியில் சாலை வசதி, மழை நீர் வடிகால் வசதி, குடிநீர் வசதியின்றி சிரமப்படுகின்றனர். சிந்துபூந்துறை நாடார் தெருவில் பாதாள சாக்கடைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா: நெல்லை புதிய பஸ் நிலையம் கழிப்பிட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் யூரின் டெஸ்ட் எடுக்கச் சென்றால், ஒரே கப்பை மீண்டும், மீண்டும் வழங்குகின்றனர்.
அலிசேக் மன்சூர்: எனது 49வது வார்டில் தெருவிளக்குகள் அமைக்க லைன் பொருத்தி 2 மாதங்களாகிறது. ஆனாலும் இணைப்பு கொடுக்கப்படவில்லை. பங்களாபேட்டை 1 முதல் 5 தெருக்களில் புதிய பைப்புகள் அமைத்துத் தர வேண்டும். கவுன்சிலர் ரசூல் மைதீன்: ஆமீன்புரம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அன்னை ஹாஜிரா ரோடு, வெகு காலமாக மோசமாக உள்ளது. இதனால் மழைநீர் அங்கு தேங்குகிறது.

38வது வார்டு கவுன்சிலர் பாலம்மாள்:  எங்கள் வார்டில் எந்த பணிகளுமே நடக்கவில்லை. வி.எம்.சத்திரத்தில் எந்த தெருவுக்குமே சாலைகள் சரியில்லை. தெருவிளக்குகள் எரிவதில்லை. மகாலட்சுமிநகர், சீனிவாசகம் நகர், முதலாளி நகரில் தார் சாலைகள் அமைத்து தர வேண்டும். ஆரோக்கியநாதபுரத்தில் சுகாதார நிலையம் அமைப்பதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். 27வது வார்டு கவுன்சிலர் உலகநாதன்: மாநகராட்சி பள்ளிகளில் ேபார்கால அடிப்படையில் வசதிகளை செய்து கொடுக்க முன்வந்தமைக்கு நன்றி. கல்லணை மேல்நிலைபள்ளியில் 3020 மாணவிகளும், உயர்நிலைப்பள்ளியில் 1540 மாணவிகளும் படிக்கும் நிலையில் அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

சுகாதார குழு தலைவர் ரம்ஜான் அலி: கல்விக்காக பெரும்தொகை ஒதுக்கீடு செய்த கமிஷனருக்கு நன்றி. மேலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். சமூகவலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இவ்வாறு விவாதம் நடந்தது. அவசரக்கூட்டத்தில் 6வது தீர்மானமான நிர்வாகஅலுவலர், கணக்கு அலுவலர் பணியிட பதவி உயர்வுக்கான தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

Tags : Nellie Corporation ,
× RELATED 24 மணி நேர கெடு முடிந்தது!: நெல்லை...