×

நெல்லையில் நடப்பு ஆண்டில் இயல்பான மழை 9 சதவீதம் குறைவு: கார் சாகுபடிக்கு உரங்கள் கிடைக்க ஏற்பாடு

நெல்லை, ஜூலை 30: நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு இயல்பான மழை 9 சதவீதம் குறைந்துள்ளது. மழை குறைவு காரணமாக அணைகளின் நீர் இருப்பும் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம் அணையின் மூலமே விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பாபநாசம் அணை உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கமான மழையளவு சற்று குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டின் இயல்பான மழையளவு 814.80 மிமீ ஆகும். ஜூலை மாதம் வரை இயல்பான மழையளவு 275.5 மிமீ பெற வேண்டும். ஆனால் தற்போது வரை 250.89 மிமீ மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது வழக்கமான மழையளவை விட 9 சதவீதம் குறைவாகும். மழையளவு குறைந்ததால் அணைகளின் நீர் இருப்பும் குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் மொத்த கொள்ளளவில் 29.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 48.21 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. எனினும் விவசாயிகள் நம்பிக்கையுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் இதுவரை நெல்லை மாவட்டத்தில் நெல் 6 ஆயிரத்து 709 எக்டேர் பரப்பளவிலும், சிறு தானியங்கள் 137 எக்டேர் பரப்பளவிலும், பயறு வகைப் பயிர்கள் 1219 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 585 எக்டேர் பரப்பளவிலும, கரும்பு 15 எக்டேர் பரப்பளவிலும், எண்ணெய் வித்துப் பயிர்கள் 80 எக்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 8 ஆயிரத்து 745 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசிய கலெக்டர்,

கார் பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தரமான ரசாயன உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் கிடைக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள விதை, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனையாளர்களிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு தரம் ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது