×

விருத்தாசலம் அருகே மனுநீதி நாள் முகாம்: 358 பயனாளிகளுக்கு ரூ2.5 கோடி நலத்திட்ட உதவிகள்

விருத்தாசலம், ஜூலை 30:மணக்கொல்லை ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில், 358 பயனாளிகளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மணக்கொல்லை ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். விருத்தாசலம் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, சார் ஆட்சியர் பழனி, கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், ஏஎஸ்பி அங்கிட்ஜெயின் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி வீராசாமி வரவேற்றார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 358 பயனாளிகளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததும் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டது. கல்வியையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் தற்போது முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்க திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு ரூ.3 ஆயிரமும் பிரசவத்திற்கு பின்பு ரூ.3 ஆயிரமும் கலைஞர் கொண்டு வந்தார். தற்போது அது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமல்படுத்தி சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். மேலும் இந்த ஊராட்சியில் 12 குளங்கள் தூர்வார கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த குளங்கள் அனைத்தும் தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். அதனால் விரைவில் குளங்கள் தூர்வாரப்படும், என்றார்.

இதில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், திமுக ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் சாமி, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரஞ்சித்குமார், ராஜா, ஜெயகுரு, ஊராட்சி செயலாளர் தணிகாசலம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைத்து துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது. இதில் அந்தந்த துறை சார்ந்த பொருட்கள் இடம் பெற்றிருந்தன. பொதுமக்களுக்கு துறை சார்ந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது. விருத்தாசலம் தாசில்தார் தனபதி நன்றி கூறினார்.

Tags : Human ,Rights Day ,Camp ,Vrudhachalam ,
× RELATED மனித வளர்ச்சி குறியீடு:193 நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 134வது இடம்