×

புதுவையில் பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்ற 7 பேர் கும்பல் அதிரடி கைது

புதுச்சேரி,  ஜூலை 30: புதுச்சேரியில் தனித்தனி இடங்களில் பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா  விற்ற 7 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து  ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போலீசார், தப்பிஓடிய ஆசாமிகளை  வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரியில் புதிய டிஜிபியாக  பதவியேற்றுள்ள மனோஜ்குமார் லால் ரவுடிகளை ஒடுக்க காவல்துறைக்கு  உத்தரவிட்டுள்ளார். மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் மீதான  கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்பேரில் புதுச்சேரி காவல்துறையினர் ஒவ்வொரு சரகத்திலும் கஞ்சா மீதான நடவடிக்கையை மீண்டும் துவங்கி உள்ளனர். இதன் காரணமாக அடுத்தடுத்த இடங்களில் கஞ்சா விற்ற  ஆசாமிகள் போலீஸ்வசம் கையும்களவுமாக பிடிபட்டுள்ளனர். லாஸ்பேட்டை,  தாகூர் அரசு கலைக்கல்லூரி மைதானம் அருகே எஸ்ஐ திருமுருகன் தலைமையிலான  போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு  சந்தேகத்துக்கிடமாக மாணவர்களை கும்பலாக அழைத்து பேசிக் கொண்டிருந்த 3 பேரை மடக்கி விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவர்களை சோதனையிட்டனர்.

அப்போது 1 கிலோ 158 கிராம் கஞ்சாவை பண்டலாக கட்டி  எடுத்துவந்து மாணவர்களுக்கு விற்றது அம்பலமானது. இதையடுத்து அவற்றை  பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று  அதிரடியாக விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை, மடுவுபேட் ராம்கி  (25), செண்பக விநாயகர் கோயில் தெரு சின்னதுரை என்ற துரை (22), ஏர்போர்ட்  பின்புற பகுதி ராமச்சந்திரன் என்ற ராம் (24) என்பதும், தொழிலாளர்களான  மூவரும் வேலையில்லாத காரணத்தால் சென்னையில் இருந்து கஞ்சா பொட்டலங்களை குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்கிவந்து கல்லூரி மாணவர்களுக்கு அதிக  விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேர் மீதும் கஞ்சா பிரிவில் வழக்குபதிந்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். இதேபோல் கோரிமேடு எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார்  காமராஜர் நகர் பல் மருத்துவக்கல்லூரி அருகே மப்டி உடையில் ரோந்து  சென்றபோது அங்கு கஞ்கா விற்பனையில் ஈடுபட்டிருந்த மொரட்டாண்டி, மாரியம்மன்  கோயில் வீதி ஹரிகரன் (21), கோரிமேடு காமராஜ் நகர், கென்னடி தெரு சுகுமாரன்  (19) ஆகியோரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். சிறுவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம்  மதிப்பிலான 300 கிராம் கஞ்சா (30 பாக்கெட்) பொட்டலங்களை கைப்பற்றிய போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில்  சுகுமாரன் ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி வருவதும், ஹரிகரன் வேலையில்லாமல்  சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. மேலும் உருளையன்பேட்டை, மகாலட்சுமி  நகர் தனியார் பள்ளி அருகே எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசை கண்டதும் 5 பேர் கும்பல் தப்பிஓட முயன்றது. அதில் ஒரு சிறுவன் உள்பட 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் இருவரையும் சோதனையிட்டனர். அப்போது 12 பாக்கெட் (120 கிராம்) கஞ்சா  பொட்டலங்களை பதுக்கி மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஆடுவெட்டும் தொழிலாளியான அருண் (22) மற்றொருவர் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது.

அவர்களை  மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்திய போலீசார், அருணை சிறையில் அடைத்தனர்.  தப்பிஓடிய கண்டாக்டர் ேதாட்டம் ஆன்ட்ரூஸ், வாணரப்பேட்டை தினேஷ் மற்றும்  சென்னையைச் சேர்ந்த முக்கிய கூட்டாளி உள்ளிட்ட 3 பேரை போலீசார் தொடர்ந்து  தேடி வருகின்றனர். இவர்கள் சிக்கினால் 5 கிலோ மதிப்பிலான கஞ்சா பண்டல்கள்  பறமுதல் செய்யப்படலாம் என உருளையன்பேட்டை காவல்துறை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. இதனால் அவர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி  வருகின்றனர்.

Tags : Puduvai ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி