குமரப்பேட்டை ஊராட்சியில் குடிநீர் பைப் உடைந்து வீணாகும் தண்ணீர்: விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்

பெரியபாளையம், ஜூலை 30: பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சியில் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குடிநீர் பைப்பை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் குமரப்பேட்டை ஊராட்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த, பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அஞ்சாத் அம்மன் கோயில் அருகே உள்ள குமரப்பேட்டை ஏரி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பைப் லைன் மூலம் குமரப்பேட்டை பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

அங்கிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆழ்துளை கிணறு பகுதியிலிருந்து செல்லும் பைப் லைன் ஒன்று உடைந்து, கடந்த இரண்டு நாட்களாக அதிலிருந்து குடிநீர் அருகே உள்ள ஏரிகால்வாயில் வீணாக பாய்ந்து வருகிறது. இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆழ்துளை கிணறு பகுதியில் பராமரிப்பு இல்லாத காரணத்தினால், மக்களின் குடிநீருக்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் பைப் லைன், இரண்டு நாட்களுக்கு முன்பு உடைந்தது.

இதனால், நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர், ஏரி கால்வாயில் வீணாக கலக்கிறதுது. இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: