×

ஊத்துக்கோட்டை பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி

ஊத்துக்கோட்டை, ஜூலை 30:  ஊத்துக்கோட்டை  பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், மாணவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படுகிறது. கோசாலையில் ஒப்படைக்க அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை - திருப்பதி சாலையில்  உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி.  இங்கு  15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள, பஜார் பகுதி மற்றும் திருவள்ளூர் சாலை,  நாகலாபுரம் சாலை,  அண்ணாசிலை நான்கு முனை சந்திப்பில் அருகில் உள்ள பகுதிகளில் மாடுகள் நடுரோட்டிலேயே சுற்றித்திரிகிறது. அதன்  உரிமையாளர்கள் பால் கறந்தவுடன் அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.

இதனை தொடர்ந்து, பஜார் பகுதியில் உள்ள சாலையில் கிடக்கும் காய்கறி கழிவுகளை சாப்பிடும்போது, ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொள்கிறது.  இதனால், அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகிறார்கள். மேலும், பள்ளி விட்டு மாணவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு ஓடுவதுடன் இதனால் நடந்து செல்லும் மாணவர்கள் அச்சத்தில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதையும்மீறி சில நேரங்களில் அவர்கள் மீது விழுவதால் காயங்களும் ஏற்படுகிறன்றது. இந்நிலையில், நேற்று ஒரு மாடு திருவள்ளூர் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் திடீரென விழுந்து விட்டது. அதை அப்பகுதியை சேர்ந்த சிலர் நீண்டநேரம் போராடி மீட்டனர்.

மேலும், சாலையில் மாடுகள் திரிவது குறித்து பேரூராட்சி சார்பில் மார்ச் மாதம் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்  தெரிவித்தனர். ஆனால், இதுவரை அதுபோன்ற  நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் மாடுகளை சாலையில் திரிய விட்டால் அபராதம் மற்றும் சிறை தண்டனை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும்  என சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Uthukottai ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு பதுக்கி...