சுற்றுச்சுவர் இல்லாத அரசு உயர் நிலைப்பள்ளி: எழுத்துகள் தொலைந்த பெயர் பலகை

ஆவடி, ஜூலை 30: ஆவடி அருகே அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் குடிமகன்கள் பாராக பயன்படுத்துகின்றனர். மேலும் குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால் உடனேயே பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பள்ளியின் பெயர் பலகையை சீரமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவடி அடுத்து வெள்ளானூர் முதல் நிலை ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி கொள்ளுமேடு வெள்ளனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ளது.

இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் பெயர் பலகையில் சில எழுத்துக்கள் இல்லாமல்,எழுத்து பிழையாக காட்சி அளிக்கிறது. ரசு ‘அ’ இல்லை, உயர் லைப்பள்ளி ‘’நி’’ இல்லை, கொள்மேடு ‘ளு’ இல்லை, அரசு உயர்நிலைப் பள்ளி கொள்ளுமேடு என்று இருக்க வேண்டும். பள்ளி பெயர் பலகையை உடனே சீரமைக்க வேண்டும். பள்ளிக்கு அருகே இருபுறமும் புதர்கள் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் குளத்தை சுற்றி உள்ள புதரில் இருந்து விஷப்பூச்சிகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து விடுகின்றன.

மேலும் சுவர் இல்லாத காரணத்தால் வெளி ஆட்கள் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்திவிட்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் பள்ளி வளாகம் மது அருந்தும் கூடாரமாக மாறி விடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மது அருந்துபவர்கள் பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: