×

அருப்புக்கோட்டையில் ரூ.1.88 கோடியில் நூலகம், அறிவுசார் மையம் அமைகிறது: நகர்மன்ற தலைவர் அறிவிப்பு

அருப்புக்கோட்டை, ஜூலை 30: அருப்புக்கோட்டையில் நகர்மன்ற அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. திமுக நகர்மன்றத் தலைர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். இதில், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், மேலாளர் சங்கர் கணேஷ், நகர் நல அலுவலர் ராஜநந்தினி, துணைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகர் மன்றத்தலைவரும், கவுன்சிலருமான சிவப்பிரகாசம் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் பேசுகையில், ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.187.94 லட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் காலனி 1வது தெருவில், புதிதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட உள்ளது.

சொக்கலிங்கபுரம் நகராட்சி மயானம் புதுப்பிக்கப்பட உள்ளது. புளியம்பட்டி மேற்கு பகுதியில் புதிய எரிவாயு தகனமேடை அமைக்கப்பட உள்ளது. காந்தி மைதானத்தில் மினி மார்க்கெட் ஏற்படுத்தவும், நகரில் 8 கி.மீட்டருக்கு மண்சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதாரக்கேடாக இருந்தால், உடனுக்குடன் தூய்மை செய்ய வருகிற ஆக.15 முதல் ‘மொபைல் கிளினிங் டீம்’ அமைக்கப்பட உள்ளது. நகரில் 36 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுங்கள்’ என்றார்.

மீனாட்சி: எனது வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகளை கட்டுப்படுத்த வேண்டும். சரவணன் சுகாதார ஆய்வாளர்: நாய்களின் எண்ணிக்கையை குறைக்க கருத்தடை செய்யப்படும். கண்ணன்: திருச்சுழி ரோடு பகுதி முழுவதும் இருள் மூழ்கி கிடக்கிறது. திருட்டுப் பயம் அதிகம் உள்ளதால் ரோட்டின் இருபுறமும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி: வார்டுகளில் சுகாதார வளாகம் அமைக்க இடம் இருந்தால் எழுதி கொடுங்கள். தனலட்சுமி: விரிவாக்கப் பகுதிகளில் முறையாக வாறுகால் வசதி இல்லை. எனது வார்டில் காண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சிவப்பிரகாசம்: தனலட்சுமி, கோகுல் ஆகிய இரு கவுன்சிலர்களும் அவர்களது வார்டுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தியது போல் மற்ற கவுன்சிலர்களும் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : 1.88 Crore Library ,Intellectual Center ,Aruppukkottai ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்;...