தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஆண்டிபட்டி, ஜூலை 30: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துறை வாரியான மனுக்கள் விசாரிக்கப்பட்டது. அதில் தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் அனைத்து நீர்வரத்து பகுதிகளிலும் வண்டல் தடுப்பு அமைக்க வேண்டும். கூடலூர் பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது.

அந்த இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அதுபோல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு சான்றிதழை வைத்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிஆர் - தந்தை பெரியார் கால்வாய் பகுதியில் ஒருபோக பாசனம் மட்டும் விவசாயிகள் செய்து வருகிறார்கள், இருபோக பாசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் சமர்ந்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, வேளாண்மை இணை இயக்குநர் அனுசுயா, மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: