மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்: திருமங்கலம் நகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள்

திருமங்கலம், ஜூலை 30: வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்குமாறு திருமங்கலம் நகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதுதவிர வணிகநிறுவனங்கள் உள்ளன. நகராட்சி சுகாதாரபிரிவு சார்பில் தினசரி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேரும் குப்பைகளை குப்பை வண்டிகள் மூலமாக தூய்மை பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.

27 வார்டுகளிலிருந்து பெறப்படும் குப்பைகளை நகராட்சியில் உள்ள மூன்று நுண்உரக்கிடங்குகளில் கொண்டு வந்து துப்புரவு பணியாளர்கள் சேர்கின்றன. இந்த மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும், மக்காத குப்பைகள் அரியலூர் சிமெண்ட் ஆலையின் எரியூட்டும் கலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து திருங்கலம் நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ்லியோன் கூறுகையில், ‘நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் தினசரி நகர் முழுவதும் வீடுகள், வணிக நிறுவனங்களில் குப்பைகளை வாங்கி வருகின்றனர்.

அனைத்து குப்பைகளும் ஒன்றாக இருப்பதால் அவற்றை மக்கும், மக்காத குப்பையாக மாற்ற வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரித்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக தரம்பிரித்து துய்மை பணியாளர்களிடம் கொடுத்தால் நகராட்சி ஊழியர்களுக்கு வேலை சுலபமாக இருக்கும். எனவே குப்பைகளை தரம் பிரித்து கொடுத்து நகராட்சிக்கு உதவும்படி கேட்டு கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: