ஜீவன் ரக்‌ஷா பதக் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஊட்டி, ஜூலை 30: 2022ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக் சார்ந்த விருதுகள் பெற தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது: மனிதர்கள் நீரில் முழ்கி இறத்தல், நெருப்பினால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள், மின்சாரத்தால் உண்டாகும் உயிரிழப்புகள், நிலச்சரிவு, விலங்குகளின் தாக்குதல்கள், விபத்துகள், சுரங்கங்களில் காப்பாற்றும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் இதர உயிர் காக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டு மனித உயிர்களை காப்பாற்றும் நபர்களுக்கு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, துணிச்சலுடன் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மனித உயிர்களை காப்பாற்றும் நபர்களுக்கு வழங்கப்படும் சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக் விருது, தாமதமின்றி காப்பாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக் விருது, ஆழ்ந்த கடுமையான உடல் காயங்களுடன் காப்பாற்றும் நபர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா பதக் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் பெற 1.10.2020க்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட உயிர் காக்கும் நிகழ்வுகள் மட்டுமே 2022ம் ஆண்டிற்கான விருதிற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்பி வைக்க வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரால் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: