×

கல்லட்டி மலைப்பாதையில் விதிமீறும் வாகன ஒட்டிகளால் விபத்து அபாயம்

ஊட்டி, ஜூலை 30:  நீலகிரி மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான, குறுகலாகவும் மற்றும் அதிக வளைவுகளை கொண்டதாக உள்ளது. இது போன்ற சாலைகளில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை இயக்கத் தெரிவதில்லை. குறிப்பாக, மிகவும் செங்குத்தாக செல்லும் கல்லட்டி சாலையில் வாகனங்களை இயக்க தெரியாமல் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. இச்சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மூலம் பல இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்த போதிலும், விபத்துகள் ஏற்படுவது வாடிக்கை.

கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடைகள், அபாயகரமான சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.  அபாயகரமாக சரிவான சாலை செல்லும் இடங்களில் கார், ஜீப், லாரி போன்ற அனைத்து வாகன ஓட்டிகளும் முதல் அல்லது 2வது கியரில் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவ்வப்போது கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனால், ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக வெளியூர் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஒட்டிகள் இச்சாலையில் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் எதையும் கடைபிடிப்பதில்லை. கியரில் செல்ல வேண்டும் என்பது விதிமுறையை மறந்து சில இருசக்கர வாகன ஒட்டிகள் இறக்கத்தை பார்த்தவுடன் வண்டியை ஆப் செய்து விடுகின்றனர். குறுகிய வளைவுகள் உள்ள சாலையில் சிலர் இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்குகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

Tags : Kallati ,pass ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா...