5-வது ஆண்டாக தொடர்ந்து செஞ்சுரி அடித்தது பவானிசாகர் அணை நீர்மட்டம்: 100 அடியை எட்டியது

சத்தியமங்கலம், ஜூலை 30:  பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று மதியம் 100 அடியை எட்டியது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு  மாவட்டம், பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி உயரமும், 32.8  டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி  மலைப்பகுதியில் கடந்த மூன்று வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியதால் பில்லூர் அணையில் இருந்து  உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.

உபரி நீரானது தொடர்ச்சியாக பவானிசாகர் அணைக்கு வந்து சேர்ந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக கடந்த 20 நாட்களில் அணை நீர்மட்டம் 17 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மதியம் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டது. நீர் இருப்பு 28.7 டிஎம்சி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2327 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் அணை நீர் தேக்க பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.

2018 ஆம்  ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக அணை நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது. இதனால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என்றாலும், அணை பாதுகாப்பு விதிமுறையின் படி ஜூலை மாத இறுதி வரை 100 அடி வரை மட்டுமே தேக்கி கொள்ள முடியும். நிர்ணயித்த கொள்ளளவான 100 அடியை எட்டிய பிறகு அணையின் பாதுகாப்பு  கருதி அணையில் இருந்து  உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் என  நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது அணைக்கு நீர்வரத்து சராசரியாக 2500 கன அடியாக இருப்பதாலும், இந்த மாதத்தில் இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. இதனாலும் பவானிசாகர் அணையின் 100 அடிக்கு மேல் வெளியேற்றப்படும்  நீரினை அணையிலேயே சேமிப்பு செய்து பவானிசாகர் அணையின் நீர்மட்டத்தை  100  அடிக்கு மேல் உயர்த்தி அதன்மூலம் குடிநீர் பாசனம் மற்றும் இதர  பயன்பாட்டுக்களுக்கு வருங்காலத்தில் பயன்படுத்தலாம் என அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையில் இருந்து  பவானி ஆற்றில் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

Related Stories: