×

சிவகாசி பொத்துமரத்து ஊருணியில் தூர்வாரும் பணி ஜரூர் மோட்டார் மூலம் கழிவுநீர் வெளியேற்றம்

சிவகாசி, ஜூலை 29: தினகரன் செய்தி எதிரொலியால். சிவகாசி பொத்துமரத்து ஊருணியில் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி மாநகராட்சியில் நிலத்தடி நீராதாரத்தை பெருக்க கண்மாய், குளங்கள், தெப்பங்களை அமைத்துள்ளனர். இந்த நீர்நிலைகளில் மழைநீர் கேரிக்கப்பட்டு வந்ததால், நிலத்தடி நீராதாரம் அதிகரித்து வந்தது. போர்வெல் கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

இந்நிலையில், நகரின் மையப்பகுதியில் உள்ள பொத்து மரத்து ஊருணியில் வேன் ஸ்டாண்ட் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். இதை அகற்றி, கடந்த 6 ஆண்டுக்கு முன்பு  பொத்துமரத்து ஊருணியில் தூர்வாரும் பணி நடைபெற்றது. பல லட்சம் மதிப்பில் ஊருணியில் முளைத்திருந்த முட்செடிகள், படர்தாமரை செடிகளை அகற்றி ஆழப்படுத்தினர். இதனிடையே, பொத்து மரத்துஊருணி ஆழப்படுத்தும் பணியின்போது, மழை காரணமாக தணணீர் நிரம்பியது. இதனால், ஆழப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தபபட்டது. அதன்பின்னர் பொத்து மரத்துஊருணி ஆழப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இதனால், ஊருணி கரையில் பூக்கடை, டீக்கடை, கோயில் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கினர். இதனிடையே சிவகாசி எம்எல்ஏ நிதியில் பொத்துமரத்து ஊருணி தூர்வார ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. கடந்த மே.20ல் பூமி பூஜை நடைபெற்றது. பொத்துமரத்து ஊருணி முழுவதுமாக துார்வாரி பூங்கா நடைபாதை,  இருக்கைகள், விளக்குகள், சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், பூமி பூஜை முடிந்து பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. இந்நிலையில், தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது பொத்துமரத்து ஊருணியில் தேங்கி நிற்கும் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியை மழை காலம் துவங்கும் முன்பு விரைந்து முடித்திட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு