×

மதுரை ரயில் நிலைய வளாகத்தில் 9 இடங்களில் 115 மழைநீர் சேமிப்பு போர்வெல் அமைப்பு

மதுரை, ஜூலை 29: மதுரை ரயில் நிலைய வளாகத்தில் மழைநீரை சேமிப்பதற்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகவும் 9 இடங்களில் 115 இடங்களில் மழைநீர் சேமிப்பு போர்வெல் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக மதுரை ரயில் நிலையம் விளங்குகிறது. தெற்கு ரயில்வே மண்டலத்தின் அங்கமாகவும், மதுரை மண்டலத்தின் தலைமையகமாகவும் உள்ளது. இந்திய ரயில்வேயின் அதிகபட்ச தகுதியான ஏ1 தரச்சான்றுடன், இந்தியாவின் முதல் 100 முன்பதிவு மையங்களுள் ஒன்றாகவும் இந்த ரயில் நிலையம் திகழ்கிறது.  

மதுரை ரயில் நிலையமானது ரூ.440 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. ரயில் நிலைய வளாகத்திற்குள் போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்துதல், பயணிகள் மற்றும் பார்சல் சேவைகளுக்கு தனித்தனி வழி அமைத்தல், வாகன நெரிசலை குறைக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மதுரை ரயில் நிலையமானது, சுமார் 163 ஆண்டுகள் முன்பு, 1859ல் திறக்கப்பட்டதாகும். தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு 60 ஆயிரத்திற்கும் அதிக பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர வெளிநாடு, வெளிமாநிலத்தவர்களும் அதிகளவில் வருகின்றனர். கன்னியாகுமரி, குற்றாலம், ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்களும் மதுரை வழியான ரயில் வழி பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

இதனால், மதுரை ரயில் நிலைய பகுதி 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும். ரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயில் முன்பு, தினமும் 100க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் நின்று செல்கின்றன. இதுதவிர, பல ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டூவீலர்கள், கார்கள் ரயில் நிலையத்திற்கு வருகின்றன. இவ்வளவு வாகனங்கள் மதுரை ரயில் நிலையம் முன்பு வந்து செல்வதால், மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவசரம், அவசரமாக இறங்கி செல்கின்றனர். இந்நிலையில், மாலை நேரத்தில் கனமழை பெய்தால் போதும், ரயில் நிலையம் முன்பு மழை தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி விடும்.

இதனால் இவ்வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றன. மேலும் ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்லும் சூழல் உருவாகும். கடந்த அதிமுக காலத்தில் முறையான மழைநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தாததும் ஒரு காரணமாக இருக்கிறது. ரயில் நிலையம் முன்பு தேங்கும் தண்ணீர் மேல வெளிவீதியில் உள்ள வடிகால் கால்வாய்க்கு செல்லும் வகையில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் திட்டங்கள் வகுத்துள்ளன. கனமழை நேரங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும வகையில் இப்பகுதியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் மழைநீர் வடிகால் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

இவ்வகையில் ரயில் நிலைய வளாகத்தில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை குழிகள் அமைத்து, குழாய்கள் மூலம் கொண்டு செல்வதற்காக 9 இடங்களில் 115 இடங்களில் தலா ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் குழிகள் அமைக்கப்பட்டு, அப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த போர்வெல் குழிகளில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 240 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு சேமிக்கப்படும். இந்த மழைநீர், நவீன சுத்திகரிப்பான்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, வளாகத்தில் உள்ள பூந்தோட்டம் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் போது, ரயில் நிலையத்தின் முன்பகுதியில் தண்ணீர் தேங்குவது குறையும். பயணிகள் எளிமையாக ரயில் நிலையத்திற்குள் சென்றுவர முடியும்.

Tags : Madurai Railway Station ,
× RELATED மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன்...