கஞ்சா வழக்கில் இருவர் விடுவிப்பு எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு உத்தரவு

மதுரை, ஜூலை 29: கஞ்சா வழக்கில் இருவரை விடுவித்த நீதிமன்றம், எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், பரவை ரயில்வே பாலம் அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த உசிலம்பட்டி ஆரியபட்டியை சேர்ந்த முத்தையா (57), செல்லூர் காசிநாதன் (55) ஆகியோர் கடந்த 22.5.2020ல் சமயநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு முறையாக நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுவிக்கப்படுகின்றனர். அதேநேரம் இந்த வழக்கில் பல பொய்யான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, இதற்காக அப்போதைய எஸ்ஐ அய்யர் மீது எஸ்பி 6 மாதத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை ஓய்வு பெற்றிருந்தால் பென்ஷன் விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: