×

குப்பையை தொட்டியில் போடுங்க பழநியில் கோலமிட்டு நூதன விழிப்புணர்வு பிரசாரம்

பழநி, ஜூலை 29: குப்பைகளை தொட்டியில் போட வலியுறுத்தி பழநியில் கவுன்சிலர் கோலம்போட்டு நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோயில் நகரான பழநியை குப்பையில்லா தூய்மையான நகராக மாற்ற பழநி நகராட்சி சார்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பழநி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும், முக்கிய இடங்களில் விளம்பர பலகைகள் வைத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பழநி 6வது வார்டில் திமுக கவுன்சிலர் வீரமணி குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டாமல் கீழே கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு நூதன விழிப்புணர்வில் ஈடுபட்டார். 6வது வார்டிற்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் குப்பைகள் அதிகம் கொட்டப்படும் பகுதியில் பெண்களைக் கொண்டு சுத்தம் செய்து, கோலம் போட வைத்து, குப்பைகளை கீழே போடாமல், குப்பை தொட்டியில் மட்டும் போடும் வண்ணம் கவுன்சிலர் மேற்கொண்ட நடவடிக்கை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பார்த்த பல கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளிலும் இதே நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

Tags : Kolamittu Nuthana ,Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது