×

மாநகராட்சி மகப்பேறு மையம் செயல்பாடு குறித்து கமிஷனர் ஆய்வு

கோவை, ஜூலை 29: கோவை மாநகராட்சி சார்பில், 100 வார்டுகளில் 32 நகர்நல மையம் மற்றும் மகப்பேறு மையம் நடத்தப்படுகிறது. இதன் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கமிஷனர் பிரதாப் தலைமை தாங்கினார். ஒவ்வொரு மகப்பேறு மையத்தின் செயல்பாடு குறித்து அதன் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின், கமிஷனர் பிரதாப் கூறியதாவது:

தற்போது பருவ மழை பெய்து வருவதால் ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, தரமான சிகிச்சை அளிக்கவேண்டும். மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய இரண்டையும் அரசு சேவை மனப்பான்மையில் வழங்கி வருகிறது. எனவே, இதன் முக்கியத்துத்தை உணர்ந்து, மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். ராஜவீதியில் உள்ள நகர்நல மருத்துவமனையில், அதிகபட்சமாக கடந்த 4 மாதங்களில் 43 மகப்பேறு நடந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். மகப்பேறு சேவையை ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பெறும் வகையில் சிறப்புடன் பணியாற்ற வேண்டும்.

நகர்நல மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியுதவிகள் முறையாக சென்றடைகிறதா? என அந்தந்த அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். நகர்நல மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை அளிக்க தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும். மருத்துவர்கள், சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, நகர்நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமா, உதவி நகர்நல அலுவலர் ராம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Municipal Maternity Centre ,
× RELATED மாநகராட்சி மகப்பேறு மையம் செயல்பாடு குறித்து கமிஷனர் ஆய்வு