×

தூத்துக்குடி, கோவில்பட்டிக்கு அடுத்தப்படியாக அதிக வருவாயை ஈட்டி தரும் கடம்பூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

கயத்தாறு, ஜூலை 29:தூத்துக்குடி, கோவில்பட்டிக்கு அடுத்தப்படியாக அதிக வருவாயை ஈட்டி தரும் கடம்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கடம்பூர் பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், கடம்பூர் சுற்று வட்டாரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஒரு காலத்தில் பருத்தி அமோகமாக விளைந்ததால் அதிக பருத்தி ஆலைகளும் அமைந்திருந்தன. 1980-95 காலகட்டத்தில் இந்த பகுதி மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை பருத்தி, உரத்தொழிற்சாலை, தீப்பெட்டி தொழில் வழங்கியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்யும் ஒரு தொழில் நகரமாக இருந்தது. ஆனால் இன்று அனைத்து தொழில்களும் முடங்கி, மக்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். இப்பகுதி மக்கள் பயணத்திற்கு ரயிலை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கடந்த 1990ல் அனைத்து ரயில்களும் கடம்பூரில் நின்று சென்றன. பிறகு சில ரயில்களின் நிறுத்தத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.

அப்போது கடம்பூர் சுற்று வட்டார மக்கள் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிராகரித்தது. அது இன்றளவும் தொடர்கிறது. கடம்பூர் ரயில் நிலையத்தில் ஒரு சில ரயில்கள் நின்று செல்ல வேண்டி கடந்த 2000ல் அனைத்து கட்சி, வியாபாரிகள் சங்கமும், 2015ல் காங்கிரஸ், வியாபாரிகள் சங்கமும் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அதனால் எந்த பலனும் இல்லை. ஆனாலும், கொரோனா காலத்திற்கு முன்பு வரை கடம்பூர் ரயில் நிலையத்தில்  முத்துநகர், அனந்தபுரி, மைசூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-மும்பை பயணிகள் ரயில், நெல்லை-ஈரோடு,  நாகர்கோவில்-கோவை, திருச்செந்தூர்-பழனி-பாலக்காடு, கொல்லம்-மதுரை போன்ற ரயில்கள் இரு வழித்தடத்தில் நின்று சென்றன. தற்போது அனைத்து ரயில்களையும் எக்ஸ்பிரசாக மாற்றிவிட்டதால் கடம்பூர் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. தற்போது மதுரை-கொல்லம் ரயிலும் நிற்பதில்லை. அதேபோன்று அனந்தபுரி, மைசூர் எக்ஸ்பிரசும் கடம்பூரில் நிற்பதில்லை. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் ரயிலில் சென்னை, கோவை உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்ல ேவண்டுமென்றால் கோவில்பட்டிக்கு சென்று ரயில் மூலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், ரயில்கள் எதுவும் நிற்காத நிலையில், கடம்பூர் ரயில் நிலையத்தில் புதிதாக 2வது நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு அடுத்து அதிக வருமானம் தருவது கடம்பூர் ரயில் நிலையம் தான். ஆனால், தற்போது ரயில்கள் எதுவும் நின்று செல்லாததால் தெற்கு ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகள் நலன் கருதியும், வருவாயை பெருக்கும் வகையில் மீண்டும் கடம்பூரில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரயில் மறியல் போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்: இது குறித்து காங்கிரஸ் நிர்வாகியும், சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் அய்யலுசாமி கூறியதாவது: தெற்கு ரயில்வே நிர்வாகம், கடம்பூர் ரயில் நிலையத்தை திட்டமிட்டே புறக்கணிக்கிறது. புதிய அறிவிப்புகள், புதிய வண்டி எது இயக்கினாலும், கடம்பூரில் நிற்காது. காரணம் வருமானம் இல்லை என்கின்றனர். ஆனால் உண்மையில், கோவில்பட்டி, தூத்துக்குடிக்கு அடுத்து அதிக வருமானம் தரும் ரயில் நிலையம் கடம்பூர். சென்னையில் இருந்து வருபவர்கள் ரிட்டன் டிக்கெட் சென்னையில் எடுத்துவிட்டால் அந்த வருமானம் கடம்பூர் ரயில் நிலையத்திற்கு வராது என்கிறார்கள்.

கடம்பூரில் நின்று சென்ற அனந்தபுரி, மைசூர் எக்ஸ்பிரஸ், மதுரை-கொல்லம் ரயில்கள் நிற்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பகலில் சென்னை செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸ் நிற்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். இங்குள்ள 2வது நடைமேடையில் இறங்கி முதல் நடைமேடைக்கு வர படிக்கட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும். பழைய ரயில்வேகேட் அமைந்திருந்த பாதையை அடைத்துவிட்டு புதிய சுரங்க பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த இடத்தின் அருகில் மழை நீரோடை, குளம் உள்ளதால் நீர்கசிவு ஏற்பட்டு சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கும். இதனால் சுரங்க பாலம் அமைக்கும் பணியினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடம்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் ரயில்வே பாலம், இணைப்பு சாலை முழுவதும் ரயில்வே இடத்தில் வருகிறது. இதை பராமரிக்க ரயில்வே துறைதான் நிதி ஒதுக்க வேண்டும். மேலும் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் இதுவரை தண்ணீர் வரவில்லை. அதை முறையாக பராமரித்து பயணிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை ஏற்று கடம்பூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல் ரயில் மறியல் போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு கடம்பூர் பகுதி சுற்றுவட்டார மக்கள் தள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kadampur ,Thoothukudi ,Kovilpatti ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...