×

கடையம் அருகே வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2ம் நாளாக போராட்டம் கலெக்டர் ஆபிசில் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து மயானத்தில் குடியேற மக்கள் முடிவு

கடையம், ஜூலை 29: கடையம் அருகே ஏ.பி.நாடானூரில் நத்தம் சர்வே எண் 91ல் கடந்த 1984ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த 9 பேருக்கு தலா 2.79 சென்ட் தமிழக அரசு வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 38 ஆண்டுகளாக இலவச பட்டா பெற்றவர்கள் யாரும் நிலத்தை அனுபவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு அரசு கொடுக்கப்பட்ட நிலத்தில் 2 பேர் நிலங்கள் தவிர மற்ற இடங்களை போலி பட்டா பத்திரம் அமைத்து கிரையம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் ஏற்கனவே போராட்டம் நடத்தி இருந்தனர். தற்போது அந்த நிலத்தில் வேலி அமைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள அம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் சமையல் செய்து சாப்பிடும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வருவாய்த்துறையினர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதே போல் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் விரைந்து வந்த போலீசாரும்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இது உடன்பாடு எட்டப்படாததால் தோல்வியடைந்தது. இதனால், இரவிலும் கோயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோயிலில் சமையல் செய்தும், பெண்கள் பீடி சுற்றியும் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர், தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, சம்பந்தப்பட்ட வேலியை அகற்றாவிடில் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு அருகேயுள்ள மயானத்தில் குடியேறப் போவதாக முடிவு செய்து அறிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Tags : Kadayam ,
× RELATED கடையம் அருகே சோளத்தட்டையில் பதுங்கிய ராட்சத மலைப்பாம்புகள்