×

3, 4வது அணுஉலை கட்டுமான பணிக்காக கூடங்குளத்தில் புதிதாக கல்குவாரி திறப்பு? தாசில்தார் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

கூடங்குளம், ஜூலை 29: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3வது மற்றும் 4வது அணுஉலை கட்டுமான பணியில் சுமார் 50 ஆயிரம்  தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ள நிலையில், 3வது மற்றும் 4வது உலை கட்டுமான பணி  பாதிக்கப்பட்டது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கட்டுமான பணியை வேகப்படுத்தும் வகையில், புதிதாக இருக்கன்துறை பகுதி-2ல் கல்குவாரி அமைப்பதற்கு எல் அன்ட் டி நிறுவனம் நிலத்தினை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் அருகில் உள்ள மக்களுக்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்படாத வகையில் அதன் வடிவத்தை எல் அன்ட் டி நிறுவனம் உருவாக்கியுள்ளது. புதிதாக அமைய இருக்கும் இக்கல்குவாரியின் கருத்து கேட்பு கூட்டம் பொதுமக்கள் முன்னிலையிலும், தாசில்தார் ஜேசுராஜ் தலைமையிலும் நேற்று நடந்தது. இதில் பாஜ மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய தலைவர் அருள் ரூபட், விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ரஜினி, சுரேஷ் என ஏராளமானோர் பங்கேற்று கல்குவாரியின் நிறை, குறைகளை எடுத்துரைத்தனர்.  கூட்டத்தில் சங்கநேரியைச் சேர்ந்த ஐயப்பன் பேசுகையில் கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கும் வகையில், கல்குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தாசில்தார் ஜேசுராஜிடம் முறையிட்டார். அப்போது, இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த தாசில்தார் ‘‘சுற்றுச்சூழல் பொறியாளர்கள் கருத்து கேட்கப்பட்டு இது தொடர்பாக விரைந்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Kudankulam ,Tahsildar ,
× RELATED கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு