ஆடி அமாவாசையை முன்னிட்டு ரங்கம் அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் குவிந்தனர்

திருச்சி, ஜூலை 29: ஆடி அமாவாசையை முன்னிட்டு ரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் திரளான பொதுமக்கள் திரண்டு புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கினர். இந்து தர்மப்படி அமாவாசை தினங்களில் தான் விண்ணுலகில் உலவும் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை, வழிபாடுகளை ஏற்க இப்பூவுலகிற்கு வருகிறார்கள் என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை நினைத்து அமாவாசை தினங்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை தினங்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும்.

மூதாதையர்களை பல ஆண்டுகளாக நினைக்கத் தவறியவர்கள் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். காவிாிக்கரையான திருச்சி ரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, திருவையாறு காவிரி படித்துறை, மயிலாடுதுறை, உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிகளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். இதில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் அதிகாலை முதலே ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர். தொடர்ந்து காவிரியில் நீராடிய பொதுமக்கள் முன்னோர்கள் மற்றும் இறந்த பெற்றோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து வணங்கினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு மாம்பழச்சாலை முதல் அம்மா மண்டபம் வரை பொதுமக்கள் கூட்டம் அதிகாலை முதல் மதியம் வரை அதிகமாக காணப்பட்டது.

முன்னதாக மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முசிறி:முசிறி பரிசல் துறை ரோட்டில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் பக்தர்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி சுவாமியை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து இறந்து போன முன்னோர்களை நினைத்து வேத விற்பனர்களை கொண்டு பிண்டம் வைத்தும், எள்ளுடன், நீர்வார்த்தும், திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கடந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் திரளான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபட்டனர். முசிறி

மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு வந்திருந்தனர்.

Related Stories: