×

ஆடி அமாவாசையை முன்னிட்டு கடற்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அறந்தாங்கி,ஜூலை 29: ஆடி அமாவாசை தீர்த்தவாரியை முன்னிட்டு கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரை பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மணமேல்குடி அருகே கட்டுமாவடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு கடற்கரையையொட்டி ராமநாதசுவாமி கோவில் உள்ளது. ராவணிடமிருந்து சீதையை மீட்க சென்ற ராமர் இந்த வழியாக ராமேஸ்வரம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அனுமன் ராமருக்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இங்கு ராமர் சிலை சுயம்பு வடிவில் உள்ளது. சீதை சமேதராக ஸ்ரீ ராமர், லெட்சுமணர், ஆஞ்சநேயர், சோம ஸ்கந்தர், விநாயகர் என பஞ்சமூர்த்திகள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இங்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் பஞ்சமூர்த்திகள் கடலுக்குள் சென்று புனித நீராடுவது (தீர்த்தவாரி) வழக்கம். சுவாமிகள் தீர்த்தவாரி முடிந்ததும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கடலுக்குள் இறங்கி புனிதநீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சாமி ஊர்வலமும் நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு கோவில் அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கடலில் இறங்கி புனித நீராடினர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபட்டனர்.

அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவில் கலைநிகழ்ச்சியும், நாடகமும் நடைபெற்றது. இதேபோன்று மணமேல்குடி கோடியக்கரையிலும் தீர்த்தவாரி நடைபெற்றது. கோடியக்கரையை பொறுத்தமட்டில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் கடல் சூழ்ந்தும், மேற்கு திசையில் மாங்க்ரோவ் தாவரங்கள் மற்றும் வானளாவிய மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகவும் உள்ளன. கடல் ‘ப’ வடிவில் உள்ளதால் அலைகள் அடிப்பதில்லை. கடலுக்குள் நீண்டதூரம் சென்று புனித நீராட வசதியாக உள்ளது. கடலுக்குள் மூலஸ்தான கோபுரத்துடன் கூடிய விநாயகர் கோவில் உள்ளது.  

கோடியக்கரைக்கு தர்ப்பணம் செய்ய வருபவர்கள் கடலுக்குள் நடந்து சென்று விநாயகரை வழிபட்டு செல்வது வழக்கம். இதற்காக கோவிலில் அதிகாலை முதலே திரளான பொதுமக்கள் குவிந்தனர். தொடர்ந்து விநாய கருக்கு அபிஷேகம், ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் முன்னோர்களை நினைவுகூர்ந்து பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து, சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதுபோன்று மீமிசல் கடற்கரையை ஒட்டியுள்ள கல்யாணராமர் சுவாமி கோவில், ஆர்.புதுப்பட்டிணம் கடற்கரையை ஒட்டியுள்ள சுப்பிரமணிய  கோவில்களிலும் ஆடி  அமாவாசை  தீர்த்தாவாரி நடந்தது.

Tags : Aadi Amavasai ,
× RELATED ஆடி அமாவாசையை முன்னிட்டு...