×

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெளிப்பாளையம் ரயில் நிலையத்தை சீரமைக்க வேண்டும்

நாகப்பட்டினம், ஜூலை. 29: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகை வெளிப்பாளையம் ரயில் நிலையத்தை சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காரைக்கால் அருகே உள்ள தனியார் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் சரக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி ஏற்றிச்செல்லும்போது அதிலிருந்து விழும் நிலக்கரி துகள்கள் வெளிப்பாளையம் ரயில் நிலையத்தில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கொட்டி கிடக்கிறது. இதனால் பொது மக்கள் நடமாட முடியாத அவல நிலையில் உள்ளனர். பயணிகள் அமரும் இருக்கைகள், தடுப்புச்சுவர்கள், கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது.

இது குறித்து நாகப்பட்டினம் நாகூர் ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் சித்திக் கூறியதாவது: மிகவும் பழமையான ரயில் நிலையம் வரிசையில் நாகப்பட்டினம், வெளிப்பாளையம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம், வெளிப்பாளையம் ரயில்வே ஸ்டேசன் இடையே பீச் ரயில் நிலையம் என்று ஒன்று இருந்தது. நாகப்பட்டினத்தில் துறைமுகம் இருந்த போது அங்கு வரும் கப்பல்களில் பொருட்கள் இந்த பீச் ரயில்வே ஸ்டேசனில் நிற்கும் சரக்கு ரயில் மூலம் பொருட்கள் ஏற்றப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு சென்றது. நாகப்பட்டினம் துறைமுகம் இல்லாமல் போனவுடன் பீச் ரயில் நிலையத்துடன் இல்லாமல் போய்விட்டது.

வெளிப்பாளையம் ரயில்வேஸ்டேசன் மட்டுமே உள்ளது. 100 ஆண்டுகளை கடந்த வெளிப்பாளையம் ரயில் நிலையத்தை சுற்றி காட்டுக்கருவை மரங்கள் மண்டி இருப்பதால் சமூக விரோத சக்திகளின் நடமாட்டம் பகல் நேரத்தில் செயல்படுகிறது. ரயில்வே போலீசார் ஒரு சிலர் மட்டுமே இருப்பதால் சமூகவிரோத கும்பல்களை விரட்டியடிக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பயந்து கொண்டு வெளிப்பாளையம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பதிவு செய்யாமல் நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேசன் சென்று டிக்கெட் எடுத்து கொண்டு அங்கிருந்து செல்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கணினி பழுது ஏற்பட்டதால் ரயில் பயணிகள் வெளிப்பாளையம் ரயில் நிலையம் வந்து டிக்கெட் எடுத்து சென்றனர். `இவ்வாறு அவசர காலங்களில் ரயில் பயணிகளுக்கு பல வகையில் பயன்படும்ரயில் நிலையமாக வெளிப்பாளையம் ரயில்வேஸ்டேசன் உள்ளது. ஆனால் ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளாத காரணத்தால் இன்று மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பயணிகள் அமருவதற்கு இருக்கை இல்லாத காரணத்தால் ரயில் ஏறச் சென்றால் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து விடுகிறது. வெளிப்பாளையம் ரயில் நிலையம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பெரும்பாலேனோர் ரயில் மூலம் தான் வந்து செல்கிறார்கள்.

இந்த மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு என்பது எட்டாக்கணியாகத்தான் உள்ளது. மிக முக்கியமான ரயில்வே ஸ்டேசனாக இருந்த வெளிப்பாளையம் ரயில் நிலையம் போதிய பாராமரிப்பு இன்றி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேசனில் சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் நின்றால் கிராசிங் ரயில்வே ஸ்டேசனாக இந்த வெளிப்பாளையம் ரயில்வே ஸ்டேசன் அதிக அளவில் பயன்படுகிறது. எனவே வெளிப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதுடன் ரயில்வே நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் வெளிப்பாளையம் ரயில் நிலையம் நிலக்கரி சேமிப்பு மையமாக மாறிவிடும்.

தனியார் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் ரயில்கள் மூலம் நிலக்கரி ஏற்றிச் செல்லப்படுகிறது. இதன்மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. எனவே இந்த வருவாய் மற்றும் தனியார் துறைமுக பங்களிப்புடன் வெளிப்பாளையம் ரயில் நிலையத்தை சுத்தப்படுத்த வேண்டும். நடைமேடை, மக்கள் அமரும் இருக்கைகள், நிழல் கொட்டகை உள்ளிட்டவைகளை மேம்படுத்த வேண்டும். பழமையான ரயில்வே நிலையங்களை பாதுகாக்க தென்னக ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Pappalayam railway station ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...