×

ராயனூரிலிருந்து கரூருக்கு கூடுதல் ஷேர் ஆட்டோ இயக்கப்படுமா?

கரூர், ஜூலை 29: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் மக்கள் நலன்கருதி கூடுதலாக ஷேர் ஆட்டோ வசதியை அதிகப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலைக்கு அடுத்ததாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக ராயனூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வேலைக்கு செல்வதற்கு கரூர் மாநகரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், ராயனூர் வழியாக கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலையில் உள்ளனர். அவ்வாறு காத்துநின்றாலும் அடுத்து வரும் பேருந்துகளில் கூட்டம் காரணமாக அனைவரும் ஒரே நேரத்தில் ஏறமுடிவதில்லை. இதனால் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடிவதில்லை. இதனால் சிலர் வீட்டிற்கு திரும்பி செல்லும் நிலை இருந்து வருகிறது.

ஒரு சிலர் குறைந்த தூரமாக இருந்தால் நடந்து செல்கின்றனர். சிலர் தெரிந்தவர்களின் இரு சக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு ஏறி சென்று விடுகின்றனர். இதில் பெண் தொழிலாளர்கள் போதிய பஸ் வசதி இல்லாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். ராயனூர் வழியாக குறைந்த அளவே ஷேர் ஆட்டோக்கள் ஓடுகிறது. அதிலும் தொங்கியபடியே செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்னையை சமாளிக்கும் வகையில் ராயனூர் வழியாக ஷேர் ஆட்டோ வசதியை அதிகப்படுத்த வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.தாந்தோணிமலை நகரின் வழியாக அதிகளவு வாகனங்கள் சென்றாலும் ஷேர் ஆட்டோக்களும் அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல, ராயனூர் வழியாகவும் ஷேர் ஆட்டோக்களை அதிகளவு இயக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Rayanur ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...