×

ஆடி அமாவாசை அமராவதி ஆற்றுப்பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


கரூர், ஜூலை 29: ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மூன்று மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் நீர்நிலைகளுக்கு சென்று நம் தலைமுறையை சேர்ந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபடுவது வழக்கம். இதேபோல் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். சிலர் தங்கள் வீடுகளிலேயே இறந்துபோன முன்னோர்களின் நினைவாக படையல் வைத்து வழிபடுவார்கள். அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் வகையில், கரூர் காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரையோரம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளான நெரூர், வாங்கல், திருமுக்கூடலூர், மாயனூர், குளித்தலை, லாலாப்பேட்டை ஆகிய காவிரி ஆற்றுப்பகுதிகளிலும், ராஜபுரம், அரவக்குறிச்சி, செட்டிப்பாளையம் போன்ற அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நேற்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளுக்கு சென்ற பொதுமக்கள், தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபாடு செய்தனர். நேற்று காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் அதிகளவு மக்கள் வந்து சென்றதால் ஆற்றுப்பகுதிகள் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்புடன் காணப்பட்டது.

Tags : Amaravati river ,Adi Amavasi ,
× RELATED அமராவதி அணையில் தண்ணீர் திறக்க அனுமதி