தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேருக்கு குண்டாஸ் கலெக்டர் உத்தரவு

தேனி, ஜூலை 28: தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுவோர், திருட்டு, வழிப்பறி குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் , கொலை குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டு வருகிறார். கடந்த ஓராண்டு காலத்தில் தேனி மாவட்டத்தில் சுமார் 100 பேருக்கு மேலானவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூடலூரை சேர்ந்த செல்வம் மனைவி அர்ச்சனா கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள காமயக்கவுண்டன்பட்டியில் ஜெகதீசன் தெருவை சேர்ந்த ஜெகதீஸ்குமார் என்ற ஜெகதீசன், காமயக்கவுண்டன்பட்டி பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சதீஸ் என்ற சதீஸ்குமார், காமயக்கவுண்டன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராமர் மகன் பாலமுருகன், காமயக்கவுண்டன்பட்டி பஞ்சமர் காலனியை சேர்ந்த கென்னடி மகன் சிவா என்ற சிவசக்தி ஆகியோர் கொலை வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

கஞ்சா விற்பனை மற்றும் கொலை குற்றங்களில் தொடர்பு சம்பந்தமாக சிறையில் உள்ள 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி பிரவீன்உமேஸ்டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரைத்தார். போலீஸ் எஸ்.பியின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் முரளீதரன் நேற்று ஒரே நாளில் கஞ்சா மற்றும் கொலை குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

Related Stories: