முதல்வர் அறிவிக்க கூடிய திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல நாங்கள் துணையாக இருப்போம்

காரைக்குடி, ஜூலை 28: காரைக்குடியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை தீவன புல்வெட்டும் கருவி மற்றும் புல் அறுவடை கருவி வழங்கும் விழா நடந்தது. டாக்டர் கோகிலவாணி வரவேற்றார். மண்டல இணை இயக்குநர் டாக்டர் நாகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், உதவி இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

எம்எல்ஏ மாங்குடி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாய வளர்ச்சிக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக மானியத்துடன் கூடிய பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் உபதொழிலான கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்த அவர்களுக்கு பல்வேறு உபபொருட்கள் மானியத்துடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 75 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவி வழங்கப்படுகிறது.  மனித சக்தியை குறைத்து கூடுதல் வருவாய் பெறுவார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.விவசாயிகளுக்கு கடந்த 1 வருடத்தில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 3 மாதத்தில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கு எழுச்சியான காலம். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிகாலம் விவசாயிகளின் பொற்காலம். முதல்வர் அறிவிக்க கூடிய அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல நாங்கள் துணையாக இருப்போம். அரசின் மானியத்துடன் கடன் உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டு பயன்பெற வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் டாக்டர்கள் லட்சுமணன், சுரேஷ், அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: